ஆர்.கே.பேட்டையில் பாமக சார்பில் நடைபெற்ற ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, பெண்கள் மற்றும் பாமகவினரை பார்த்து கையசைத்த காட்சி.
திருவள்ளூர்: ‘மக்கள் கேட்ட நல்ல திட்டங்களை எல்லாம் கொண்டு வராமல், யாரும் கேட்காத டாஸ்மாக் மதுபான கடைகளை திமுக அரசு திறக்கிறது’ என, ‘பசுமைத் தாயகம்’ அமைப்பு தலைவர் சவுமியா அன்புமணி குற்றம் சாட்டினார். ‘பசுமைத் தாயகம்’ அமைப்பு தலைவர் சவுமியா அன்புமணியின் ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்’நிகழ்வுநேற்று திருவள் ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டையில் நடைபெற்றது.
இதில், சவுமியா அன்புமணி பேசியதாவது: ஆந்திர மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் கிலோ கஞ்சா புழங்குவதாக தகவல் வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கஞ்சா புழங்குவதால், இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள போதை பழக்கத்தால், பொதட்டூர்பேட்டையில் இன்சூரன்ஸ் பணத்துக்காக இரு மகன்கள், தந்தையையே பாம்பு கடிக்கச் செய்து கொன்றுள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரால், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதற்காக ஒரு அரசாங்கம் நமக்கு வேண்டும்? திருத்தணியில் ஒரு நெசவு பூங்கா கொண்டு வரவேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பூ விவசாயிகளுக்கு ஒரு நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிகைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
மக்கள் கேட்ட நல்ல திட்டங்களை எல்லாம் கொண்டு வராமல், யாரும் கேட்காத டாஸ்மாக் மதுபான கடைகளை திமுக அரசு திறக்கிறது. ஆகவே, வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுத்து, பாமக தலைவர் அன்புமணி பின்னால் நிற்கவேண்டும். அப்படி நின்றால்தான், மது போதை இல்லா தமிழ்நாடு உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
பாமகவினர் வாக்குவாதம்: சவுமியா அன்புமணி, நேற்று காலை திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சௌமியா அன்புமணியுடன் 5 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருடன் வந்த 20-க்கும் மேற்பட்ட பாமகவினர் அனுமதி மீறி கோயில் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை கோயில் ஊழியர்கள் தடுத்தனர். இதையடுத்து, கோயில் ஊழியர்களிடம் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.