சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற, நிலத்தை கையகப்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அக்குழுவின் உறுப்பினர் ஜாபர் அலி அனுப்பியுள்ள கடிதம்: நாட்டில் வேகமாக நகரமயமாக்கல் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.
இதனால் போக்குவரத்து கட்டமைப்பு மிகவும் அவசியமாகிறது. தமிழகத்தில் ரூ.22,808 கோடி செலவில், 1,700 கி.மீ. தொலைவுக்கு 9 புதிய ரயில்பாதை, 3 இரட்டை பாதை திட்டங்கள் உட்பட மொத்தம் 15 ரயில் பாதை திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதில், தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தித் தருவதில் தாமதம் ஏற்படுகிறது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலம் தேவையாக உள்ளது.
ஆனால் 3,274 ஹெக்டேர் நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் உள்ளது. அதாவது 75 சதவீதம் நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் ரயில்வே திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்து தலே முக்கியத் தடையாக உள்ளது.
குறிப்பாக மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, சென்னை - புதுச்சேரி - கடலுார், ஆவடி - பெரும்புதுார் - கூடுவாஞ்சேரி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, ராமேசுவரம்- தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு ரயில் பாதை திட்டங்களில் பல ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, மாநில அரசு போதுமான நிலங்களை கையகப்படுத்தித் தர வேண்டும்.
மேலும் தமிழகத்தில் புதிய ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த, ரயில்வே துறையுடன், தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.