புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசுக்கு எதிரான பாத யாத்திரையை தொடங்கி வைக்க வர காங்கிரஸாரின் அழைப்பை சோனியா, பிரியங்கா ஏற்றுள்ளதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்க டெல்லி சென்றுள்ளனர்.
முன்னதாக நேற்று மாலை டெல்லி இந்திரா பவனில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி விருந்து அளித்தார். இந்த விருந்தில் புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அப்போது, புதுவையில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசை கண்டித்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு பாத யாத்திரையை காங்கிரஸ் சார்பில் நடத்த உள்ளதாகவும், பாத யாத்திரையை தொடங்கி வைக்க சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை ஏற்று யாத்திரையை தொடங்கி வைக்க சோனியா காந்தி புதுவை வருவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
தேர்தலையொட்டி சோனியா, பிரியங்கா புதுச்சேரி வரவுள்ளது கட்சியை பலப்படுத்தும் என புதுச்சேரி காங்கிரஸார் தெரிவித்துள்ளனர்.