திருமாவளவன்
மதுரை: தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்படும் என மதுரையில் திருமண விழா ஒன்றில் தொல்.திருமாவளவன் பேசினார்.
மதுரை கருப்பாயூரணி பகுதியில் விசிக-வின் கருத்தியல் பரப்பு நிர்வாகி செல்லப்பாண்டியின் இல்ல விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட மக்கள் அணி திரள பயந்த காலத்தில் நமது இயக்கத்தை நாம் தொடங்கினோம். எல்லா வகையிலும் தாக்குப் பிடித்து கால் நூற்றாண்டை கடந்து வந்துள்ளோம். எவராலும் நம்மை கடந்து அரசியல் செய்ய முடியாது. இது சாதாரண இயக்கம் அல்ல.
இந்தியா முழுவதிலுமிருந்து ‘எங்கள் மாநிலத்திலும் விசிக கொடி பறக்கவேண்டும்’ என பலரும் தேடிவரும் நிலைக்கு தேசிய கட்சியாக உருவாகியுள்ளது. இதுதான் பலரின் அடி வயிற்றில் தீ பற்றி எரிகிறது. பொறாமை தீயில் பலரும் வெந்து தணிகின்றனர். எப்படி எல்லாம் குற்றம், குறைகள் கண்டுபிடிக்கலாம்? விமர்சிக்கலாம் என நினைக்கின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளனர். இன்றைக்கும் அப்படியொரு நிலை உள்ளது. இன்றைக்கு புதிய கூட்டணியில் இணைந்துள்ளோம். இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். இது உருவாக என்னனென்ன காரணிகள் இருந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். பதவி, அதிகாரம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி அவசரமாக முடிவு எடுக்கவில்லை. விசிக உடனே முடிவெடுக்கவில்லை என என்னை பிராண்டி எடுத்தனர்.
சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். எனது பேஸ்புக்கை கவனிக்க மற்றவர்களை போன்று ஆட்கள் வைப்பதில்லை. சில நேரத்தில் தனது அரசியல் கருத்துக்களை நானே டைப் செய்து பதிவிடுவேன். திமுகவில் இருந்ததால் பல்வேறு பழிகளை சுமந்தோம். திமுகவில் 2009-ல் இருந்து தொடர்ந்து பயணித்தோம்.
தவெகவை திமுக விமர்சித்து இருக்கவேண்டும். நான் , சீமான் போன்றவர்கள் விமர்ச்சித்தோம். ஆனாலும் தவெக ஆதரவு கேட்டதால் கொடுத்தோம். அமைச்சர் பதவி கொடுத்தனர். நாங்கள் எப்போதும் இடதுசாரிகளுடன் தொடர்ந்து பயணிக்கிறோம்.
ஏற்கெனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கும் நிலையில், தற்போது எங்களது புதிய கூட்டணியிலும் மதசார்பற்ற என்ற வார்த்தை இடம் பெறவேண்டும் என வலியுறுத்தி அது இடம் பெற்றுள்ளது. இது திமுகவுக்கு போட்டியாக அல்ல. பாஜகவுக்கு எதிராக இருக்கும்.
நாங்கள் அமைச்சரவையில் இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து விலகி கொள்ளவும் தயார். திமுக கூட்டணியில் நாங்கள் அமைச்சராக இருந்திருக்க முடியுமா? இன்றைக்கு காலம் கட்டளையிட்டு இருக்கிறது. இனிமேல் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் என்பதை தவெக உறுதி செய்து இருக்கிறது” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.