சக்திவேல்
திருவள்ளூர்: ஜம்மு, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த திருத்தணி பகுதியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சத்திரம் ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (30). இவர், இந்திய ராணுவத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் காலை 11 மணியளவில், சக்திவேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது.
இதில், சக்திவேல் வீரமரணம் அடைந்தார். இந்த தகவல், இந்திய ராணுவம் சார்பில், சக்திவேல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஜம்மு, காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து, விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும்.
சொந்த ஊரான சத்திரம் ஜெயபுரம் வந்ததும், டிச. 6-ம் தேதி (இன்று) குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.வீரமரணம் அடைந்த சக்திவேலுக்கு மனைவி (தேவ (26)), மகள் (ஆஷிகா செர்லின் (4)), மகன் (லெனின் அக்ரன் (2)) உள்ளனர்.