தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

திருவாரூர் சூரிய மின்சக்தி திட்டம், மன்னார்குடி ஜவுளி பூங்காவுக்கு தினகரன் எதிர்ப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: ‘திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கும், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பானதாக இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி நடைபெறும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

          

அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் விளைநிலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப் பூங்காவுக்கு அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருகவாழ்ந்தான் பகுதியில் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வெப்பநிலை மதிப்பீடு, நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் கிராம சபை ஒப்புதல் என எந்தவித முறையான அனுமதியுமின்றி இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விளை நிலங்களோடு விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இந்த சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமைதியான முறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்திருப்பது சர்வதிகாரப் போக்கின் உச்சபட்சமாகும்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும், முறையான அனுமதி இன்றியும் அவசரகதியில் நடைபெறும் இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டமும், சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் நடவடிக்கையும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பசுமைப் பரப்பு வெகுவாக குறையும் என்பதோடு உணவு உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெற்று வரும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தையும், ஆலங்கோட்டை கிராமத்தில் அடிக்கல் நாட்டியிருக்கும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்திடுவதோடு, வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT