தமிழகம்

சென்னையில் மீண்டும் போட்டியிட 6 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு - திமுக தலைமை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் 6 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இந்த வேட்பாளர் பட்டியலானது, கட்சியில் பெரும் பாலானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவருமே தங்கள் தொகுதிகளில் மீண்டும் களமிறங்கியுள்ளனர். அதனுடன் அதிகளவிலான புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

          

இதன் மூலமாக, கட்சியில் உதயநிதியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதை அறிய முடிகிறது. அதேநேரம் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக, தலைநகரான சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் கடந்த முறையை போல் திமுக தற்போதும் 15-ல் போட்டியிடுகிறது. இதில் நடப்பு எம்எல்ஏக்கள் தி.நகர் கருணாநிதி, அண்ணாநகர் மோகன், ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி, வில்லிவாக்கம் வெற்றியழகன், திரு.வி.க. நகர தாயகம் கவி, எழும்பூர் பரந்தாமன் ஆகிய 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக புதுமுகங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தவெகவின் போட்டியை சமாளிக்கும் வகையில் சென்னை மாவட்டத்தில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை எழும்பூரில் தமிழன் பிரசன்னா, அண்ணா நகரில் சிற்றரசு, தி.நகரில் ராஜா அன்பழகன், ராயபுரத்தில் சுபேர்கான், திருவிக நகரில் முன்னாள் எம்எல்ஏ ரவிசந்திரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

திமுகவின் மூத்த தலைவராக இருந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கும் இந்த முறை வில்லிவாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அங்கு ஆதவ் அர்ஜுனா போட்டியிட இருப்பதால் உதயநிதிக்கு நெருக்கமான கார்த்திக் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல், விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில், 3 வது முறையாக ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் பொன்னேரி, திருத்தணி, திருவொற்றியூர் தவிர்த்து 7 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இதில் அம்பத்தூர் எம்எல்ஏ சாமுவேல் ஜோசப் மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பூர்ணிமாவுக்கு தரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தவிர மீதமுள்ள 2 தொகுதி களில் திமுக களம் காண்கிறது. இதில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மாற்றப்பட்டு, நித்யா சுகுமாருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திருப்போரூர் செய்யூர் தவிர 5 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா. செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக கிருத்திக் தண்டபாணி (செங்கல்பட்டு) போட்டியிடுகின்றனர். மேலும், கடந்த முறை கூட்டணி கட்சியிடம் இருந்த மதுராந்தம் (தனி) தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் அமுலு பொன்மலர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT