சிவகாசி: சிவகாசி அருகே வடபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான ‘கிருஷ்ணா பைரோடெக்னிக்ஸ்’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நமஸ்கரித்தான்பட்டி - எம்.புதுப்பட்டி சாலையில் உள்ள இந்த வளாகத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்ற 3 யூனிட்கள் இயங்கி வருகின்றன.
இந்த பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வேதிப்பொருள் கலவை செய்வதற்காக வாங்கப்பட்ட புதிய இயந்திரம் பொருத்தப்பட்டது. குஜராத் மாநிலம் பரோடாவைச் சேர்ந்த அகமது இப்ராகிம்(45) என்ற பொறியாளர் இயந்திரத்தை பொருத்தி, சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் அங்கிருந்த பட்டாசு ஆலை காசாளர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொறியாளர் அகமது இப்ராகிம் 95 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைகளால் மருந்துக்கலவையை தொழிலாளர்கள் தயாரிக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடப்பதைத் தவிர்க்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அந்த இயந்திரமே விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்து வந்தசிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குஜராத் பொறியாளரின் சொந்த ஊர் திருநெல்வேலி பேட்டை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.