சென்னை: சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்னர், ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ கூறியிருந்த நிலையில் இந்த முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026, ஏப்ரலில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மதிமுக தனக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலுமே உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்துடன் மொத்தம் 176 தொகுதிகளில் உதய சூரியன் சின்னம் களம் காண்கிறது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிக-வுக்கு 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக-2, மதிமுக -4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.