சென்னை: அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக அரசு உறுதி அளித்திருப்பதால் எஸ்ஐஆர் பணி புறக் கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அளவுக்கு அதிகமான பணி நெருக்கடி காரணமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட் டியல் (எஸ்ஐஆர்) பணிகளை நவ.18 முதல் முற்றிலும் புறக்கணிக்கும் போராட்டத்தை வருவாய்த் துறை அலுவலர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முதல் எஸ்ஐஆர் படிவங்களை பெறுவது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை புறக்கணித்தனர்.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கள உதவியாளர்கள் என ஏறத்தாழ 42 ஆயிரம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர்பி.அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி அளித்ததால் எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்திருப்பதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், சி.குமார், அ.பூபதி, அண்ணா. குபேரன், எஸ்.ரவி ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுடனான பேச்சுவார்த்தை யில் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக அரசு உறுதி அளித்தது.
அதோடு 19-ம் தேதி (நேற்று) அனைத்து மாவட்டஆட்சியர்களும் பெரா கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, இனிமேல் அதிகமான பணிநெருக்கடிகள் இருக்காது என்றும் விடுமுறைநாட்களில் பணி செய்யும் நிர்பந்தம் ஏற்படாது என்றும் எனவே, எஸ்ஐஆர் பணிக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் வருவாய்த் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் பெரா மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் 18-ம் தேதி மீண்டும் பேசினர்.
அப்போது வெளிமாவட்டங்களில் முகாம் பணியில் இருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்களும் சென்னைவந்ததும் இதுகுறித்து பேசி உரியஆணைகள் வழங்குவதாக உறுதி அளித்தனர். அவர்களின் வேண்டுகோளின்பேரில் எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளோம். இவ்வாறு கூறியுள்ளனர்.