தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சென்னையின் 4,079 வாக்குச் சாவடிகளிலும் இன்றும் சிறப்பு முகாம்!

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் குவிந்த நிலையில், இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 12,47,690 ஆண் வாக்காளர்கள், 13,31,243 பெண் வாக்காளர்கள், 743 இதர வாக்காளர்கள் என மொத்தம் 25 லட்சத்து 79 ஆயிரத்து 676 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். நடந்து முடிந்த எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணி மூலம், மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிக்காக நேற்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் இடம்பெயர்ந்ததாக 12,22,164 வாக்காளர்கள், கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் 27,328 வாக்காளர்களும் நீக்கப்பட்ட நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் நேற்று ஏராளமானோர் குவிந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உரிய படிவங்களை அளித்தனர். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்று பார்க்கவும் ஏராளமான வாக்காளர்கள் வந்திருந்தனர்.

இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது. குறிப்பிட்ட முகவரியில் வசித்து நிலையில், பெயர் நீக்கப்பட்டிருந்தாலும், உயிரோடு இருக்கும் நிலையில், இறந்ததாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருந்தாலும், அதுதொடர்பான ஆட்சேப மனுக்களையும் இந்த சிறப்பு முகாம்களில் வழங்கலாம். 2026 ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணபிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், ஆட்சேபங்களை தெரிவிக்கவும் 2026 ஜன.18-ம் தேதி கடைசி நாள். அதுவரை விண்ணப்பங்கள் பெறப்படும். பரிசீலனைக்குப் பிறகு, பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

SCROLL FOR NEXT