தமிழகம்

நீதிமன்ற அவமதிப்பு விசாரணை தொடரும்: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி விளக்கம்

‘முழு நடவடிக்கைக்கும் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை’

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணையை தொடரலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் மீது நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீது தனி நீதிபதி கடந்த டிச.4-ல் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், பிற மேல்முறையீட்டு மனுக்களுக்கு வழக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.

          

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அரசு தரப்பு, “தனி நீதிபதி முன்பு உள்ள அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது” என்றது. அதற்கு, மனுதாரர் தரப்பு, “டிச.4-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மட்டுமே அமர்வு தடை விதித்துள்ளது” என்றது.

அப்போது நீதிபதி, “முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தடை உத்தரவில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது? அந்த உத்தரவில், ஏப்.8 வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது” என்றார்.

அரசு தரப்போ, “அனைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து தொடரப்பட்ட ஒரு உரிமையியல் மற்றும் இதர மனுக்களுக்கும் பொதுவான இடைக்காலத் தடை பொருந்தும். மனுவில் கோரப்பட்ட கோரிக்கைகள் குறித்து பதிவுத்துறையிடம் விளக்கம் கேட்டால் குழப்பத்தை தவிர்க்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, “அமர்வில் என்ன கேட்டீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? என்று வினவ, “பதிவுத் துறையிடம் அறிக்கை கேட்கலாம்” என்றது அரசு தரப்பு.

அப்போது நீதிபதி, “அது என் வேலையல்ல, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால உத்தரவின்படியே செயல்படுவேன். இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவுக்குக் கீழ்ப்படிவது என் கடமை. உங்களைப்போல் அல்லாமல் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மரியாதை அளிப்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. இவ்வளவு பிடிவாதமாக இருக்கக் கூடாது. எனக்கு எதிராக உங்கள் எதிர்ப்பைக் காட்டாதீர்கள்” என்றார்.

அரசு தரப்பில், “அப்படியில்லை. நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?” என்று வினவப்பட்டது. அதன்பின் நீதிபதி, “காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஏன் ஆஜராகவில்லை. அவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை. தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்களா, இனிமேல் அவர்களின் முகங்களை பார்க்க நான் விரும்பவில்லை. சட்டப்படி அவர்களை கையாள்வேன்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் மேல்முறையீடு செய்தனர். அதை தள்ளுபடி செய்து டிச.4-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மீறப்பட்டது, வேண்டும் என்றே செய்யப்பட்டதா, இல்லையா என்பதை ஆய்வு செய்வது தனி நீதிபதியின் பொறுப்பு என அமர்வு உத்தரவிட்டது. அந்த உத்தரவும், நேற்று அமர்வு பிறப்பித்த இடைக்காலத் தடையும் முரண்பட வாய்ப்பில்லை.

எனவே, முழு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் எந்த தடையும் இல்லை. நீதிமன்றத்தில் கடைசி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதாக உத்தரவில் இல்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம். விசாரணை ஏப். 9-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT