திருவள்ளூர்: செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவனை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டு, குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப் படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளிலும், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் கவிதாவின் உத்தரவின்படியும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சாந்தியின் அறிவுறுத்தலின்படியும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், சாலைகளில் சுற்றித்திரியும் மற்றும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீட்டு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்ட் லைன் உறுப்பினர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதிகள் கொண்ட மாவட்ட தடுப்புப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு சமீபத்தில் ஆவடி, பொன்னேரி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டது.
இதில் செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவனை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மீட்டு, குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.