சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் தமிழக காவல் துறையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்பட்டது.
இப்படை கடந்த 3 முதல் 9-ம் தேதிவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைவரான ஐஜி பவானீஸ்வரி வெளியிட்டனர்.
அதன் விவரம்: மாவட்ட அளவிலான களப்பிரிவுகள் பெற்ற 371 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, அதில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காணாமல்போன 7 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 13 பேரை மீட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அறிவுசார் குறைபாடுடைய 12 பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு உரிய மறுவாழ்வு வசதிகள் செய்யப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 3,882 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள 9,507 இடங்களில் தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் ஒரு குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 57 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
செங்கல்பட்டில் அரசுப் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் பிச்சை யெடுக்க வற்புறுத்தப்பட்ட அறிவுசார்குறைபாடுடைய பெண் ஒருவர் மீட்கப்பட்டு, அவருக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்பூரில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் குழந்தைகள் உதவி அமைப்புடன் இணைந்து 33 பள்ளி இடைநிற்றல் மாணவ-மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.