சென்னை: முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில், தமிழை பின்னுக்கு தள்ளியிருப்பது ஏற்புடையது அல்ல என திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: மாற்றம் என்று கூறிக்கொண்டு தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி காலத்திலும்கூட இவ்வாறான செயல் நடைபெறவில்லை. தற்போதைய ஆட்சியின் மூலம் தமிழ்மொழி பின்னுக்கு தள்ளப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து போன்று தமிழகமும் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்துக்குரியது. இந்த தவறு மீண்டும் தொடரக்கூடாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: முதல்வர் விஜய்யின் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது, பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது.
மேலும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல. எனவே, அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தமிழக அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தான் இதுவரை கடைபிடித்து வரும் மரபு.
ஆனால் முதல்வரின் பதவியேற்பு விழாவில், வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
திக தலைவர் கி.வீரமணி: முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதை பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சு கொதிக்கிறது. இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க முதல்வர் வழிவகை காண வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: பதவியேற்பு விழாவில் நீண்டகால மரபு மீறப்பட்டுள்ளது அதிர்ச்சிஅளிக்கிறது. ‘வந்தே மாதரம்’ பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவா அல்லது ஆளுநரை மகிழ்விக்கச் செய்யப்பட்டதா என்பதற்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த தமிழர் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது. அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டதில் உடன்பாடு இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தமி்ழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டதில் தவெகவுக்கும் உடன்பாடு இல்லை என்றும், இனி வரும் காலங்களில் இதுபோல நடைபெறாது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதுதொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக் கப்பட்டதில் தவெக தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசுக்கும் உடன்பாடு இல்லை.
தாய்த்தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாக பாடுவது என்பது நீண்ட கால மரபு. நாங்கள் இதுதொடர்பாக ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது மத்திய அரசின் புதிய சுற்றறிக்கைப்படி செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.