பிரதிநிதித்துவப் படம்
சென்னை: தோலில் அரிப்பு, நீர் கொப்பளங்கள் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோய்க்கான டெனிலிக்ளிப்டின் மருந்து அட்டையில் பக்கவிளைவு எச்சரிக்கையை குறிப்பிட வேண்டும் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சர்க்கரை நோய் டைப் 2-க்கு மெட்ஃபார்மின், சிடாக்ளிப்டின், செமகுளூடைன், டெனிலிக்ளிப்டின் போன்ற பல்வேறு மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, டெனிலிக்ளிப்டின் என்ற மருந்தை உட்கொண்டவர்களுக்கு காணப்பட்ட பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் புல்லஸ் பெம்பிகாய்டு என்ற நோய், அந்த மருந்தால் அரிதாக ஏற்படுவது தெரியவந்தது. இந்நோயால் ஏற்படும் தோலில் அரிப்பு, வலியுடன் கூடிய நீர் கொப்பளங்கள் ஏற்படுவது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை நடத்தி, நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் டெனிலிக்ளிப்டின் மருந்துகளின் அட்டையில் புல்லஸ் பெம்பிகாய்டு பாதிப்பை பக்கவிளைவாக சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
வழிகாட்டுதல்கள்: அதனை ஏற்று, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்ட சுற்றறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் டெனிலிக்ளிப்டின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிபுணர் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அந்த மருந்தின் விளம்பரங்கள் மற்றும் மருந்தின் அட்டைகளில் புல்லஸ் பெம்பிகாய்டு ஒரு பக்க விளைவு என்பதை குறிப்பிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.