சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 9-வது சித்த மருத்துவ தினம் கொண்டாட்டத்தை நேற்று தொடங்கி வைத்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார்.

 
தமிழகம்

சித்த மருத்துவ மாணவர்கள் அதிக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த வேண்டும்’ என்று குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து நடத்திய 9-வது சித்த மருத்துவ தினம் கொண்டாட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வை குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது: பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் யோகா போன்றவை கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வுக்கு பங்களித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் நமது மருத்துவத்தால் மக்கள் பயன்பெறுகின்றனர்.

அலோபதி (ஆங்கில மருத்துவம்) சிறந்ததா, இந்திய மருத்துவமுறை சிறந்ததா? என விவாதம் இருந்தாலும், மத்திய அரசின் நோக்கம், நோய்க்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் சிகிச்சை முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கரோனாதொற்றால் நான் பாதிக்கப்பட்ட போது அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை இல்லையென்றாலும், நான் உட்பட பலர் அங்கு தான் சிகிச்சைக்கு சென்றோம். அலோபதி மருத்துவம் ஒரு நோய்க்கு தீர்வாக இருக்கிறது. ஆனால், அதற்கான மருந்தை உட்கொள்ளும்போது, அவை மற்றொரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பாரம்பரிய மருத்துவமுறை, நோயைக் குணப்படுத்து வதில் காலதாமதம் ஏற்படும். ஆனால், நோயின் அடிநாளம்வரை சென்று குணப்படுத்தக் கூடியது. ஆனால், அலோபதி மருத்துவம் நிரந்தர தீர்வாக இல்லாமல், தற்காலிக மருத்துவ நிவாரணமாக உள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை சித்த மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவம் தொடர்பான புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் படிப்பதை அதிகரிக்க வேண்டும். புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் போன்ற தொற்றாநோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ முறைகள் ஆயுஷ் மருத்துவத்தில் இருக்கிறது. எனவே, மருத்துவ முறைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ஆயுஷ் மருத்துவர்கள் முன்வர வேண்டும்.

ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பேசும்போது, “ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், தேசிய சித்த நிறுவனம், 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது. ஆராய்ச்சிதான், மருத்துவத்துக்கு முதுகெலும்பு ஆகும்” என்றார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “சித்த மருத்துவ பல்கலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சட்ட மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலில் உள்ளது” என்றார்.

இந்த நிகழ்வில் சித்த மருத்துவத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக, சித்த மருத்துவ துறையைச் சேர்ந்த 5 முக்கியப் பிரமுகர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆயுஷ் அமைச்சகத்தின் இணை செயலாளர் மோனாலிசா தாஷ், தமிழகசுகாதாரத்துறை செயலர் பி.செந்தில்குமார், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தின் இயக்குநர் எம்.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT