மதுரை: மதுரையைச் சேர்ந்த பிடிஆர் வினோத் என்பவர் மீது கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழிப்பறி, கத்தியால் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு, அவர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ், பி.தனபால் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாதாரண சட்டம், ஒழுங்கு சார்ந்த பிரச்சினையே தவிர, பொது அமைதியை பாதிக்கும் அளவுக்கானதல்ல.
இதற்காக உடனடியாக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவது தேவையற்றது. மனுதாரரை குண்டர்தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ததற்கு போதிய முகாந்திரம் இல்லை. எனவே குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இனி வரும் காலங்களில் ஒரு முறையான வழிமுறையை உருவாக்க வேண்டும். இது குறித்து டிஜிபி அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கை ஏப்.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.