படம்: மு. லெட்சுமி அருண்

 
தமிழகம்

கல்குவாரிகளை கண்காணித்து வரும் அரசு அமைப்புகளில் குறைபாடுகள்: அறப்போர் இயக்க குழுவின் அறிக்கையில் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் விதிமீறல்கள் மட்டுமின்றி, அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைப்புகளிலும் குறைபாடுகள் இருப்பதாக அறப்போர் இயக்க நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்த தன்னிச்சை குழு அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி அறப்போர் இயக்கம் சார்பில் நடைபெற்றது.

கல் குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த முறையீடுகளின் அடிப்படையில், கடந்த 8 மாதங்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து வழக்கறிஞர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகள் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள், ஆவணங்கள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 29 குவாரிகள் தொடர்பாக குழு ஆய்வு செய்துள்ளது. குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிமம் வெட்டி எடுப்பது, முறையான பெஞ்சிங் இல்லாமல் குவாரிகள் செயல்படுவது, பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவது, வெடிவைத்து கல் உடைப்பதால் கற்கள் தூக்கி வீசப்பட்டு வீடுகள், மரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் பாசன குழாய்கள் சேதமடைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன.

குவாரி லாரிகளால் கிராம சாலைகள் சேதமடைவது, போக்குவரத்து விபத்துகள் ஏற்படுவது, பொதுப்பாதைகள் தடைபடுவது போன்ற பிரச்சினைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. சில குவாரிகள் செயல்பட்டு முடிந்த பின்னர் பாதுகாப்பின்றி விடப்பட்ட ஆழமான குழிகளால் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் குழந்தை உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகள் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இணைந்து ட்ரோன் மற்றும் கள ஆய்வு மூலம் சரிபார்த்துள்ளனர். இந்த நடைமுறையை அனைத்து குவாரிகளுக்கும் விரிவுபடுத்த குழு பரிந்துரை செய்கிறது.

ட்ரோன் மூலம் அளவிடப்படும் உண்மையான கனிம அகழ்வு அளவை, அரசு அனுமதி வழங்கியுள்ள சுரங்க திட்டத்துடன் ஒப்பிட்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

இதுபோல் குவாரிகளின் குத்தகை விவரம், அனுமதிக்கப்பட்ட சுரங்கத் திட்டம், சுற்றுச்சூழல் அனுமதி, அனுமதிக்கப்பட்ட கனிம அளவு, ட்ரோன் ஆய்வு அறிக்கை, அதிகாரிகளின் ஆய்வு அறிக்கை மற்றும் விதிக்கப்பட்ட அபராதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

குவாரி தொடர்பான புகார்களை கண்காணிக்க வெளிப்படையான ஆன்லைன் புகார் தீர்வு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். உயிர், சொத்து, நீர்வளம் அல்லது பொதுக்கட்டமைப்புக்கு உடனடி ஆபத்து ஏற்படுத்தும் புகார்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குவாரிகளில் நடைபெறும் விதிமுறை மீறல்கள் மட்டுமின்றி, அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைப்புகளிலும் குறைபாடுகள் இருப்பதாக நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கனிம வளங்களை எடுப்பதற்காக மனிதஉயிர், விவசாயம், நீர்வளம், பொதுச்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது. குவாரிகள் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் மட்டுமே செயல்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT