சென்னை: மாநகராட்சி சார்பில் ரூ.86.40 லட்சத்தில் கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவுநேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் ரூ.86.40 லட்சத்தில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 86 பயனாளிகளுக்கு பாய், தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, கைவினைப் பொருட்கள், பலூன்கள், அழகுசாதனப் பொருட்கள், பூக்களை விற்று வந்த 86 ஆதரவற்றோர் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில், 2,500 சதுர அடியில், ரூ.86.40 லட்சத்தில் இரவுநேரக் காப்பகம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இரவு நேரம் மற்றும் மழை, வெயிலின்போது அவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் இருந்த சூழலில், இந்த காப்பக வசதி பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
இந்த காப்பகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், குளியலறைகள், அவர்களது பொருட்களை சேமித்து வைப்பதற்கு அலமாரிகள், குடிநீர் வசதி, மின் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பாய், போர்வை உள்ளிட்ட 15 அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் வீடற்றோர்களுக்கு ஏற்கெனவே 45 இடங்களில் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக அமைக்கவும் ஆலோசித்து வருகிறோம்.
எஸ்ஐஆர் திட்டத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக தமிழகத்தில் 97 லட்சம் பேரும், சென்னையில் 14 லட்சம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நீக்கப்பட்ட வாக்காளர்கள், விடுபட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் இவர்களையெல்லாம் எப்படி சேர்ப்பது என்பது குறித்து தலைவர் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. இப்பணியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.