செல்வப்பெருந்தகை

 
தமிழகம்

“ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” - செல்வப்பெருந்தகை உறுதி

செய்திப்பிரிவு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் யசோதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, யசோதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதல். பாஜக அரசுகளின் இந்நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு ஏன் மோடி தனது கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

பல மாநில கூட்டணிகளில் கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்குவதால் சிக்கல் இருக்கிறது. கூட்டணியில் 2 மாதம் முன்பே சில வேலைகளை பேசி முடித்தால் தான் பிரச்சாரம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். அதைத் தான் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திமுக-விடம் பேசி இருக்கிறார். எனவே, திமுக-விடம் முன்கூட்டியே பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்றஅடிப்படையில் பொறுப்பாளர் வலியுறுத்தி இருக்கிறார். காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் என்பதால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என தெரிவித்திருக்கிறார் கிரிஷ் சோடங்கர். தமிழ்நாடு காங்கிரஸின் கருத்தும் அது தான்.

இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. இந்தியாவை வழிநடத்தப் போவது இண்டியா கூட்டணி தான். திருச்சிவேலுசாமி தவெக-வுடன் பேசுவதாகச் சொல்வது அவருடைய சொந்தக் கருத்து. அது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு விரைவில் வர உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT