கோவை: ஆட்சி, அதிகாரம் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்த தீர்ப்பை கொடுத்துள்ளனர். ஆட்சி, அதிகாரம் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முறையில் தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேச முயற்சி நடைபெற்று இருப்பதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று பேசிய பேச்சின் பின்னணி என்ன என்பது, எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் விலை பேசிய நபர்களை கைது செய்ததில் இருந்து தெரியவருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்களாக விரும்பி, வேறு கட்சியில் இணைவது என்பது சாதாரண விஷயம்.
எம்எல்ஏக்களை விலைபேசியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனு கீர்த்தனா குடும்பத்தினரை பெ.சண்முகம் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.