திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் ஆபிரகாமை அழைத்து வரும் போலீஸார். படம்: மு.லெட்சுமி அருண்

 
தமிழகம்

4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: கிறிஸ்தவ மத போதகருக்கு 4 தூக்கு தண்டனை

போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பைபிள் வகுப்பு நடத்​து​வ​தாகக் கூறி 4 சிறுமிகளைப் பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில், கிறிஸ்தவ மத போதகருக்கு போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் 4 தூக்கு தண்​டனை வழங்கி தீர்ப்​பளித்​துள்​ளது.

திருநெல்​வேலி மாவட்​டம், தேவர் குளத்தை அடுத்தமேல இலந்​தகுளம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆபிர​காம் (53). கிறிஸ்தவ மத போதக​ரான இவர், அதே பகு​தி​யில் உள்ள கிறிஸ்தவ சபை​யில் பணி​யாற்றி வந்​தார். மேலும், தனது வீட்​டுக்​குச் சிறுமிகளை வரவழைத்​து, அவர்​களுக்​குப் பைபிள் வகுப்பு நடத்தி வந்​தார். வெளியூர்​களில் நடை​பெறும் சபை ஊழிய நிகழ்ச்​சிகளுக்​கு, அந்த சிறுமிகளை அழைத்​துச் சென்​றுள்​ளார்.

இந்​நிலை​யில், கடந்த 2022-ம் ஆண்டு பைபிள் வகுப்பு மற்​றும் ஊழிய நிகழ்ச்​சிகளுக்​காக அழைத்து செல்​லப்​பட்ட 12, 13 மற்​றும் 8 வயதுடைய ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட மொத்​தம் 4 சிறுமிகளை, தனது வீட்​டில் அடைத்து வைத்து ஆபிர​காம் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக புகார் தெரிவிக்​கப்​பட்​டது.

பாதிக்​கப்​பட்ட சிறுமிகளின் தாய், திருநெல்​வேலி ஊரக மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில், போக்சோ சட்​டத்​தின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வந்​தனர். மாவட்ட கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் சண்​முகம் தலை​மை​யில், மகளிர் காவல் ஆய்​வாளர் ராதா உள்​ளிட்ட போலீ​ஸார் அடங்​கிய தனிப்​படை அமைக்​கப்​பட்​டு, விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. விசா​ரணைக்​குப் பின் ஆபிர​காம் கைது செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்கு விசா​ரணை திருநெல்​வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. வழக்​கில் சாட்​சிகள் அனை​வரும் ஆஜர்​படுத்​தப்​பட்ட நிலை​யில், வழக்​கின் இறுதி விசா​ரணை நிறைவு பெற்​றது. இதையடுத்​து, இந்த வழக்​கில் நீதிபதி சுரேஷ்கு​மார் நேற்று தீர்ப்பு வழங்​கி​னார்.

கடும் தண்டனை: மத போதக​ராக​வும் சிறுமிகளின் தந்தை வயதுடைய​வ​ராக​வும் இருந்து கொண்​டு, சிறுமிகளுக்​குப் பாலியல் வன்​கொடுமை செய்து குற்​றம் இழைத்​துள்​ள​தால் கடுமை​யான தண்​டனை வழங்​கப்​படு​வ​தாக தமது தீர்ப்​பில் நீதிபதி குறிப்​பிட்​டார். நான்கு சிறுமிகளைப் பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்​ காக ஆபிர​கா​முக்கு 4 தூக்கு தண்​டனை​யும் ரூ.52 ஆயிரம் அபராத​மும் விதித்து நீதிபதி தீர்ப்​பளித்​தார். மேலும், பாதிக்​கப்​பட்ட 4 சிறுமிகளுக்​கும் தலா ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.

திருநெல்​வேலி மாவட்​டத்​தில் இந்த ஆண்டு இது​வரை 17 போக்சோ வழக்​கு​களில் 17 பேருக்கு தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. அதில் 2 பேருக்கு தூக்கு தண்​டனை​யும் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாவட்ட காவல் துறை கண்​காணிப்​பாளர் விஷ்வேஷ் பா.​சாஸ்​திரி தெரி​வித்​துள்​ளார்.

வழக்​கறிஞர் கருத்து: திருநெல்​வேலியைச் சேர்ந்த குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.பிர​பாகரன் கூறிய​தாவது: கொலை வழக்​கு​களில் இரட்டை ஆயுள், மூன்று ஆயுள் சிறை தண்​டனை​கள் வழங்​கப்​படு​வது போல், இந்த வழக்​கில் 4 மரண தண்​டனை​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. 4 சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​ட​தால், ஒவ்​வொரு சிறுமி​யின் பாதிப்​புக்​கும் ஒரு மரண தண்​டனை என்று கணக்​கிட்டு நீதிபதி இத்​தீர்ப்பை வழங்​கி​யுள்​ளார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் பகு​தி​யில் 17 வயது மாண​வியைப் பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்த வழக்​கில், பாலியல் குற்​றத்​துக்​கும், கொலைக்​கும் என தலா ஒரு மரண தண்​டனை வீதம் 2 மரண தண்​டனை விதித்து தூத்​துக்​குடி போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் இந்த ஆண்டு தீர்ப்பு கூறி​யிருந்​தது.

இது​போல், கடந்த 2020-ம் ஆண்​டில் புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் 7 வயது சிறுமியைப் பாலியல் வன்​கொடுமை செய்​து, கொலை செய்த வழக்​கில் தலா ஒரு மரண தண்​டனை வீதம் இரட்டை மரண தண்​டனையை, புதுக்​கோட்​டை மகளிர்​ நீதி​மன்​றம்​ வி​தித்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

மயங்கி விழுந்த ஆபிரகாம்: நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் ஆபிரகாம் மயங்கி விழுந்தார். உடனே, நீதிமன்ற வளாகத்தில் இருந்த செவிலியர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தீர்ப்பையொட்டி ஆபிரகாமின் மனைவி, மகள் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டதும் அவர்கள் கதறி அழுதனர். அவர்களை அங்கிருந்த போலீஸார் வெளியே அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT