தமிழகம்

கிருஷ்ணகிரி அருகே வெறிநாய் கடித்து 7 பேர் காயம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே வெறிநாய் கடித்ததில் 7 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குருபரப்பள்ளி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிகிறது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று, இன்று என இரண்டு நாட்களில் வெறிநாய் ஒன்று திடீரென குருபரப்பள்ளி கிராமத்தில் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி, துரத்திக் கடித்துள்ளது. குருபரப்பள்ளி வேணுகோபால் தெருவில் வசிக்கும் சரஸ்வதி, விபுஷணன், அரிச் சரண், ஞானவேல், தாண்டவன் உட்பட 7 பேரை நாய் கடித்துள்ளது. நாய் கடியில் பாதிக்கப்பட்டவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் முருகன், சுகாதாரத்துறை கடலரசு ஆகியோர் குருபரப்பள்ளியில் ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் வெறிநாயைப் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்ததில் 7 பேர் காயம் அடைந்த நிலையில், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக குருபரப்பள்ளியைச் சேர்ந்த வேல்முருகன் கூறும்போது, “எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித் திரியும் நாய்கள் ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் வெளியே வீசப்படும் கழிவுகளை சாலையில் இழுத்துக் கொண்டு, ஒன்றை ஒன்று துரத்தி ஒடும் போது, இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள், நாய்கள் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்லும் சம்பங்கள் நடக்கின்றன.

இதே போல் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், சண்டையிடும் நாய்களை அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசிகள் போட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT