சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப்பணி நடைபெற உள்ளதால் 9 ரயில்களின் சேவைகள் நாளை (ஆக.5) முதல் மாற்றப்படவுள்ளன.
மின்சார ரயில்களின் சேவையில் ஆக.22 முதல் 30-ம் தேதிவரை மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்க முதல்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. இதையடுத்து, விரைவு, மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டன. முக்கியப் பணிகள் முடிந்த பிறகு, ரயில்களின் இயக்கம் சீரானது.
மின்சார ரயில்களும் வழக்கம் போல, 10, 11-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் கட்டமாக, நடைமேம்பாலப் பணிகளுக்காக, சில விரைவு ரயில்கள் சேவை நாளை (ஆக.5) முதல் தாம்பரத்துக்கு மாற்றப்பட உள்ளன.
இதுதவிர, மின்சார ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் விதமாக, புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், ஆக.5 முதல் 30-ம் தேதி வரை, தினமும் 5 மணி நேரம் ரயில் பாதையை மூடவும், மின்சாரத்தை நிறுத்தவும் ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நேரத்தில் 6 முதல் 11-வது நடைமேடை வரை நடைமேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் நிறுவுதல், கர்டர்கள் பொருத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளைப் பொருத்தவரை தற்போது, வரை 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் ஆக.5-ம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
விரைவு ரயில்கள் மாற்றம்
நடைமேம்பாலப் பணிகள் காரணமாக, தஞ்சாவூர் - எழும்பூர், மங்களூரு - எழும்பூர், கொல்லம் - எழும்பூர், சேலம் - எழும்பூர் ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலும், திருச்சி - எழும்பூர் மலைக்கோட்டை விரைவு ரயில் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலும் ஆக.5-ம்
தேதி முதல் ஆக.19-ம் தேதி வரை இயக்கப்படும்.
அதேபோல், மறுமார்க்கமாக இந்த ரயில்கள் அனைத்தும் ஆக.6 முதல் ஆக.20-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில், ஆக.6, 13-ம் தேதிகளில் திருத்தணி, செங்கல்பட்டு என மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக செல்லாது.
அதேபோல், திருச்சி - ஆமதாபாத் விரைவு ரயில், ஆக. 9, 16-ம் தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி வழியாக செல்வதால், எழும்
பூர், பெரம்பூர் வழியாகச் செல்லாது மின்சார ரயில்கள் ரத்து கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் சில மின்சார ரயில் சேவைகள் ஆக.22 முதல் ஆக.30-ம் தேதிவரை முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படவுள்ளன. அதுபற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.