சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: அறநிலையத் துறை, வக்பு வாரியம் போல கிறிஸ்தவ தேவாலயங்களின் சொத்துகளை நிர்வகிக்க தனி அமைப்பை உருவாக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிஎஸ்ஐ தூத்துக்குடி - நாசரேத் மறை மாவட்டத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்னர் பிறப்பித்த உத்தரவு: சிஎஸ்ஐ தூத்துக்குடி - நாசரேத்மறைமாவட்ட தேர்தல் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதுடன், இந்த வழக்கை இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து மீண்டும் விசாரிக்க வேண்டும்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவாலயங்களின் பெயரில் ஏராளமான சொத்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இதனால் திருமண்டில அளவிலான தேவாலய தேர்தல்களில் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் போட்டியும் கடுமையாக நிலவுகிறது.
நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலய சொத்துகளை பாதுகாப்பது அவசியமானது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்து கோயில்களை நிர்வகிக்கவும், சொத்துகள் மற்றும் இதர செலவினங்களை முறைப்படுத்தவும் அறநிலையத் துறை இயங்கி வருகிறது. அதேபோல இஸ்லாமியர் சொத்துகளை முறைப்படுத்த வக்பு வாரியம் உள்ளது.
எனவே, கிறிஸ்தவ தேவலாயங்களின் நிர்வாகம் மற்றும் நிதிமேலாண்மையை ஒழுங்குப்படுத்த புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சக செயலர், தமிழக தலைமை செயலரை எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள் கிறிஸ்தவ தேவாலய சொத்துகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை சட்டப்பூர்வமாக நிர்வகிக்க அமைப்பை உருவாக்குவது தொடர்பாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.