செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் | கோப்புப் படம்
மதுரை: வருமான வரி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது அவரது வீட்டில் சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தாக கரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அசோக்குமாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நான்கு வாரம் சனிக்கிழமைகளில் கரூரில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி அசோக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக என் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
அப்போது தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் கரூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றுவதில் சிரமம் உள்ளது.
எனவே சனிக்கிழமைகளில் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகும் நிபந்தனைக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் நிபந்தனையை மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர் கரூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்கு பதில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடலாம் என நிபந்தனையை மாற்றி உத்தரவிட்டார்.