கரூர்: “தவெக ஆட்சி நீடித்தால் தமிழகம் 25 ஆண்டுகள் பின்தங்கிவிடும்” என திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆணவமாகவும், கொச்சையாகவும் பேசியதாக முதல்வர் விஜய்யை கண்டித்து கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று (செப்.12) கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ பேசியது: “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் காவல் துறை மானிய கோரிக்கையில் திமுக மீது காழ்ப்புணர்ச்சியுடன் சினிமா க்ளைமாக்ஸ் வசனம் போல மைக் முன்பு கத்தி, கத்தி மனப்பாடம் செய்ததை முதல்வர் விஜய் பேசினார்.
அவர் பேசியதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? உண்மைக்கு மாறானவற்றையும், புறம்பானவற்றையும் பேசியுள்ளார். வன்மையான பேச்சு. தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல் இல்லாதவர். சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் உடல்மொழி அருவருப்பாக இருந்தது. இந்த ஆட்சி நீடித்தல் தமிழகம் 25 ஆண்டுகள் பின்தங்கிவிடும்.
இவர் என்ன தியாகம் செய்தார்? சிறுவர்கள், வாக்காளர்களை ஏமாற்றி, வாக்குறுதிகளை அள்ளி வீசி, ரீலிஸ் வெளியிட்டு ஆட்சியை பிடித்துள்ளார். சினிமா வசனம் பேசி ஆட்சிக்கு வந்த உங்களுக்கு என்ன தெரியும்? வருமான வரி கட்டாதது குறித்து நீதிமன்றம் உங்களை ஒருமையில் விமரிசித்ததை திரும்பிப் பாருங்கள்.
கரூரில் 41 பேர் உயிரிழந்தப்போது புறமுதுகிட்டு ஓடிய கோழை. முதலில் அந்த இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டது திமுக. அப்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உடனடியாக வந்து உயிரிழந்தர்கள் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியவர் நீங்கள்.
107 இடங்களில் வெற்றி பெற்று, திமுக வெற்றிப் பெற வாக்களித்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணையுடன் திமுக ஆதரவில் ஆட்சி அமைத்துள்ளீர்கள்.
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த நிதி தேவையில்லை. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. ஏழை மக்களை பற்றிய அக்கறை இல்லை. தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இது செயல்படாத அரசு.
மக்கள் பணிகளை செய்யாமல் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு லைக்ஸ்களை பார்ப்பதுதான் வேலை. வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். அவர் எதற்கு சென்றுள்ளார் என உங்களுக்கே தெரியம். தொழில் துறை அமைச்சர் செல்லாமல் முதல்வர் சென்றுள்ளார். எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார். எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகளை பெற்று வருகிறார் எனப் பார்ப்போம்.
திமுக, திமுக தலைவர்கள், முன்னோடிகள் குறித்து அவதூறாக பேசுவதை முதல்வர் விஜய், தவெகவினர் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் மிகப் பெரிய பின்விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என எச்சரிக்கிறேன். அவர் பேசிய இடம் சட்டப்பேரவையாக இல்லாமல் வேறு இடமாக இருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
கரூருக்கு வழங்கப்பட்ட குடிநீர், புதை சாக்கடை, ஐடி பூங்கா திட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்து விரைவில் தலைமை அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும். திமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தாமதமின்றி நிறைவேற்றவேண்டும்.
திமுக திட்டங்களின் பெயர்களை மாற்றலாம். திட்டங்களை நிறுத்தினால் மக்கள் வெகுண்டு எழுந்து விடுவார்கள். இரு இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும். விரைவில் கரூருக்கும் தேர்தல் வரும். கரூரில் கொஞ்சம் அசால்டாக இருந்துவிட்டீர்கள் என நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். நான் இங்கிருந்து வேலை பார்த்திருக்கவேண்டும் தெரிவித்தேன். மக்களிடம் வாக்குகள் வாங்கி, அதனை பேரம் பேசி விற்று ஆளுங்கட்சியிடம் விலைபோய் விட்டார்கள்.
இடைத்தேர்தல் நமக்கு கிடைத்துள்ள இன்னொரு வாய்ப்பு. இடைத்தேர்தல் எதனால் வந்தது? யாரால் வந்தது என கரூர் மக்களிடம் கேட்டு பிரச்சாரம் செய்யவேண்டும். கரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வி.செந்தில் பாலாஜி கூறுகையில், “தவெக அரசு பதவியேற்ற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள், 300 பாலியல் வன்கொடுமைகள், 200 கொலைகள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் சட்டப்பேரவையில் பதில் அளிப்பதுதான் மரபு.
உண்மை நிலை அறியாமல் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தனர். திமுக ஆட்சியில் கூடுதல் கட்டணம் தொடர்பாக 26,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு இப்போது என்ன பாட்டு பாடுவார்கள்? இந்த 116 நாட்களில் தவெக அமைச்சர்கள் எதில் எவ்வளவு கமிஷன் பெற்றுள்ளார்கள் என மற்றொரு சமயம் தெரிவிக்கிறேன்” என்றார்.