செந்தில் பாலாஜி
மேட்டுப்பாளையம்: “புதுடெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, சேலத்தில் இருந்து வந்தாலும் சரி... இங்கு திமுக தான் வெல்லும்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மேட்டுப்பாளையம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (ஏப்.10) நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேசும்போது, ‘‘மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கவிதா கல்யாணசுந்தரத்தை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
திமுகவினர் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும். புதுடெல்லியில் இருந்து வந்தாலும் சரி, குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி, சேலத்தில் இருந்து வந்தாலும் சரி இங்கு திமுக தான் வெல்லும்’’என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம், செந்தில்பாலாஜி கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது நிச்சயம். அதேபோல் கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும்" என்றார்.