சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, தன்னிடம் சிலர் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறை பதிவு செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை கடந்த 8-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். அதன்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் வழங்கினர்.
சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தது ரூ.25000-க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10:30 மணி, மாலை 5:30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது. நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நிபந்தனை விதித்தார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜி, இன்று காலை 10.30 மணியளவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். உயர் நீதிமன்றம் உத்தரவின்படி ரூ.25 ஆயிரம் தொகைக்கு, இரு நபர் உத்தரவாதம் தாக்கல் செய்தார்.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் வழக்கை விசாரணைக்கு எடுத்த முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் உத்தரவாதத்தை ஏற்று கொண்டார்.
நாளை முதல் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையொப்பம் இட அனுமதித்தார் . காலை முதல் பிற்பகல் 3 மணி வரை நீதிமன்றத்தில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.
நாளை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை,மாலை இரண்டு வேலையும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையொப்பம் இட வேண்டும். அசோக் குமார் வேறு வழக்கு காரணமாக கரூரில் இன்று உள்ளதால் வரும் திங்கள் கிழமை சரணடைந்து முன் ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.