சிவகங்கை காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக, திமுகவினர். (வலது) திமுகவினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாதிரி கூப்பன்கள்.

 
தமிழகம்

ரூ.8,000 மாதிரி கூப்பன் விநியோகத்தால் பரபரப்பு - சிவகங்கையில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கையில் ரூ.8,000-க்கான மாதிரி கூப்பன் விநியோகித்த 2 பேரை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். அவர்களை அதிகாரிகள் விடுவித்ததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அதிமுக, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கருணாஸ், அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டி யிடுகின்றனர்.

சிவகங்கை 5-வது வார்டில் திமுகவினர் சிலர் வீடு வீடாகச் சென்று ரூ.8,000-க் கான மாதிரி கூப்பன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அதிமுக, பாஜகவினர் அங்கு சென்று 2 பேரை கூப்ப னுடன் பிடித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ஆரோக்கிய ரூபல்லா தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் நகர் போலீஸாரிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இருவரையும் போலீஸார் விடுவித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நகரச் செயலாளர் என்.எம்.ராஜா, பாஜக நகரத் தலைவர் உதயா தலைமையிலான அதிமுகவினர் சிவகங்கை நகர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.

அதேநேரம் நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையிலான திமுகவினர் அங்கு வந்தனர். மாதிரி கூப்பன் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

ரூ.8,000 மாதிரி கூப்பன் குறித்து விளம்பரம் செய்வதற்குத்தான் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. கூப்பனை வாக்காளர்களிடம் விநியோகிக்கக் கூடாது என்று அதிமுகவினர் கூறினர்.

இதனால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அதிமுகவினர் புகார் மனு கொடுத்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘மாதிரி கூப்பன் கொடுத்ததில் விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, தவறு இருந்தால் வழக்குப் பதிந்து விசாரிக்கப்படும்’ என்றனர்.

அதிமுகவினர் கூறுகையில், ‘கூப்பன் விநியோகம் செய்த நபர்களை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். பறிமுதல் செய்த கூப்பன்களை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.

ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருவரையும் தப்பவிட்டனர். தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்’ என்று கூறினர்.

SCROLL FOR NEXT