தஞ்சாவூா்: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களை பணியிட மாறுதல் செய்யும் வகையில், பணிமூப்பு பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
பொது கலந்தாய்வு மூலம் இந்த பணியிட மாறுதல் மேற்கொள்ளப்பட உள்ளதால் பணியாளர்கள் வரவேற்று உள்ளனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் 38 மாவட்டங்களில் 4,408 கடைகள், 23 ஆயிரம் பணியாளர்களுடன் 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும், சொந்த வட்டத்தை விட்டு பிற வட்டங்களில் பல்வேறு இடங்களில் பணியாற்றுவதால், அவர்கள் பணியிட மாறுதல் கோரி வந்தனர்.
மேலும், பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு மூலம் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, பணியிட மாறுதல், நியமனம், சுழற்சிமுறை, கலந்தாய்வு ஆகியவை மேற்கொள்ள ஏதுவாக, பணியாளர்களின் பணிமூப்பு பட்டியல் டாஸ்மாக் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பணியில் சேர்ந்த நாள், கல்வித் தகுதி, பிறந்த நாள், பணியின் தன்மை, உடற்தகுதி, பணியாற்றும் இடம், கடைகளின் தன்மை, எத்தனை நாள் பணியாற்றியுள்ளார் என்பது போன்ற விவரங்களுடன் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அந்தந்த மாவட்ட மேலாளர் மூலம், அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 173 பேரின் பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறியது: டாஸ்மாக் கடைகள் தொடங்கிய 2003 -ம் ஆண்டு முதல் நாங்கள் பணியாற்றி வருகிறோம். தொடக்ககாலத்தில் கிடைக்கும் இடத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணியை தொடங்கினோம்.
இதனால், பல கிலோ மீட்டர் தொலைவு நாள்தோறும் பயணித்து பணியாற்றி வந்தோம். இதனால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்ததால், நாங்கள் இடமாறுதல் கேட்டு தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது.
பணியிட மாறுதல் செய்ய வேண்டுமானால், பொது கலந்தாய்வு மூலம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக, பணியாளர்களின் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதும் ஆட்சேபனை இருந்தால், உடன் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏ, பி, சி என 3 வகையாக பணியிட சுழற்சிமுறை மாறுதல் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது, பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பணியிடமாறுதல் வழங்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.