சென்னை: ஆட்சியை கவிழ்க்க தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக மூத்த பத்திரிகையாளரிடம் 2-வது நாளாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
வழக்கின் ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, குற்றச்சதி நடைபெற்ற காலகட்டத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் திருநாவுக்கரசுடன் தொடர்ந்து குறுஞ்செய்திகள் பரிமாறி தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பத்திரிகையாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சைபர் தடயவியல் பகுப்பாய்வுக்காக அவரது செல்போனையும் போலீஸார் பெற்றுக்கொண்டனர்.