ப.சிதம்பரம்

 
தமிழகம்

“தவெக அரசை ஆதரிக்க இந்த இரண்டு காரணங்கள் போதும்!” - ப.சிதம்பரம் பட்டியல்

தமிழினி

சென்னை: “மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்கிறோம், மாநில உரிமையை பாதுகாப்போம்” என தவெக சொல்கிறது. இந்த இரண்டு காரணங்கள் தமிழக அரசை ஆதரிக்க போதுமே. மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற அடிப்படையான கொள்கைகளிலிருந்து விலகாத வரை அவர்களை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெக ஆட்சிக்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் நிலையான அரசாக நல்லாட்சியை தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த தேர்தலில் நானோ, காங்கிரஸ் கட்சியோ, ஊடகங்களோ, கருத்துக்கணிப்போ என யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றி கழகம் ஏறத்தாழ 35 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. மகத்தான வாக்கு பதிவை வாங்கி ஆட்சியை அமைத்திருக்கிறது தவெக.

கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்ததற்கு எனது பாராட்டுக்கள். தவெக-வுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஒரு ஓட்டாவது இருந்திருக்கிறது. அனைத்து பிரிவுகளிலும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக எனது பார்வையில், நகர்ப்புற பகுதிகளில் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள். அதாவது, சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

இந்த அரசு, இளைஞர்களின் நம்பிக்கையை காப்பாற்றி அவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வித் திட்டங்கள், தொழில் செய்வதற்கான திட்டங்களை அரசு வரையறுத்து, நிறைவேற்ற வேண்டும் என்பது எனது கோரிக்கை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மு.வீரபாண்டியனை சந்தித்தேன்; கூட்டணி விவகாரத்தில் அவர் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என சொல்லியிருந்தார். அவ்வாறு அவர்கள் எடுத்த முடிவை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு நான் டெல்லி சென்றுவிட்டேன்; பின்னர், அண்மையில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவருக்கு நன்றி தெரிவித்தேன். கருத்து பரிமாறிக் கொண்டோம். அவர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகுவதாக எனக்கு சொல்லவில்லை. இந்தக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியும். மேகேதாட்டு விவகாரத்தில் திமுக, அதிமுக எடுத்த முடிவை காங்கிரஸ் ஆதரித்தது. அதேபோல தற்போதைய அரசின் முடிவையும் காங்கிரஸ் ஆதரிக்கும்.

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி ஓர் இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். அது ஓர் அரசியல் கட்சியாக மாறுமா, மாறாதா என்பது எனக்கு தெரியவில்லை. பாஜகவில் அவரை சரியாக மதிக்கவில்லை, பயன்படுத்தவில்லை என்று தான் அவர் பேட்டியில் இருந்து நான் உணர்கிறேன். பாஜக எங்களுக்கு கொள்கை எதிரி என்று சொல்லியிருக்கிறது தவெக. மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்கிறோம், மாநில உரிமையை பாதுகாப்போம் எனச் சொல்கிறார்கள். இந்த இரண்டு காரணங்கள் தமிழக அரசை ஆதரிக்க போதுமே. மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற அடிப்படையான கொள்கைகளிலிருந்து விலகாத வரை அவர்களை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் பேசியபோது, அவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். தமிழக மக்கள் மறுதேர்தலை விரும்பவில்லை என்பதுதான் என்னுடைய கணிப்பு. பின்னர், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜக பின் வாசலில் வந்து அரியணையில் அமர்ந்துவிடும். எங்களின் நிலைப்பாடு பொதுவான நிலைப்பாடு.

திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுவது குறித்து எனக்கு தெரியாது. தெரியாத விசியத்தைப் பற்றி எப்படி கருத்து சொல்வது; இது எனது அறியாமையாக இருக்கலாம், அதேவேளையில் இது உங்களின் அறிவுக் கூர்மையாக இருக்கலாம்.

தவெக தற்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. 31 அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கு அனுபவம் இல்லாதவர்கள். 101 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் வந்துள்ளார்கள். அவர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT