கோவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, மூடப்பட்ட அண்ணா சிலை முன்பு நின்று பேசிய தவெக கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன்.
கோவை: கோவை அருகே சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜன.3) கட்சி நிகழ்ச்சிக்கு வந்த செங்கோட்டையனுக்கு, அங்குள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
தவெக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜன.3) மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தவெக மாநில ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவரை தவெக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
முன்னதாக, சிறுமுகை அருகேயுள்ள ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு செங்கோட்டையன் மாலை அணிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிலை அதிமுகவினரால் வைக்கப்பட்டது, இச்சிலைக்கு மாலை அணிவிக்க செங்கோட்டையனை அனுமதிக்க முடியாது என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எம்ஜிஆர் சிலைக்கு செங்கோட்டையன் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு செங்கோட்டையன் மாலை அணிவிக்க தவெகவினரால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க தவெகவினர் முறைப்படி அனுமதி பெறவில்லை எனக் கூறி மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் செங்கோட்டையன் மாலை அணிவிக்க அனுமதி மறுத்தனர். மேலும், அங்கிருந்த சிலை கதவையும் நகராட்சி அலுவலர்கள் மூடினர்.
இதனால் தவெகவினர் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து பூட்டப்பட்ட அண்ணா சிலைக்கு முன்பு, அண்ணாவின் படத்தை வைத்து அதற்கு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அண்ணா சிலை அருகே திரண்டிருந்த தவெக நிர்வாகிகள் முன்பு கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘‘திராவிட இயக்கம் எனக் கூறிக் கொள்பவர்கள்தான் அனைவரும் வணங்க வேண்டிய அண்ணா சிலையை பூட்டி வைத்துள்ளனர். இவர்களது ஆட்சி அதிகாரம் அண்ணாவை கூண்டில் பூட்டியுள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் தவெகவையே தாக்குகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. உழைப்பவர்களுக்கு உணவு இல்லை. படித்தவர்கள், இளையோர் மத்தியில் ஆதரவு பெருகுவதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெறும். உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில், விஜய் 371 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அடுத்த இடத்தில் தான் பிரதமரே உள்ளார். விஜயை முதல்வராக்கும் வரை ஓய மாட்டேன். இங்கு வந்துள்ள கூட்டம், ஒரு ரூபாய் செலவில்லாமல் வந்த கூட்டம்’’ என்றார்.