தவெக நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்
சென்னை: "இன்று திமுக வேறு, அதிமுக வேறு அல்ல. இரண்டும் ஒன்றாக இணைந்துதான் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன" என்பதை நாடறியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த கே.ஏ. செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். அப்போது இந்த கட்சி 100 நாட்கள் கூட நீடிக்காது என்று எதிர்கட்சிகள் சொன்னர்கள். ஆனால் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்ஜிஆர். அந்த தலைவர் மறைந்தபோது அதிமுக இரண்டாக உடைகிற சூழல் எழுந்தபோது ஜெயலலிதாவின் வழியில் நான் என் அரசியல் பயணத்தை மேற்கொண்டேன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலச்சூழல் காரணமாக மூன்று கூறுகளாக அதிமுக பிரிந்தது. எல்லாரும் ஒன்றினைய வேண்டும் என்றுதான் கருத்துகளை வெளிப்படுத்தினோம். ஆகவே இன்றைய சூழலில் நான் சொல்ல விரும்புவது, ‘நானென்று ஒருவன் நினைத்தான், ஆண்டவன் தானென்று பார்த்துக் கொள்வார்”.
முதலில் என்னுடைய பொறுப்புகளை எடுத்தார்கள். தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியபிறகு என்னுடைய உறுப்பினர் பதவியை கூட எடுத்துக் கொண்டனர். 50 ஆண்டுகாலம் இந்த அரசியல் பயணத்தில் நான் சந்தித்த ஏற்றத் தாழ்வுகளுக்கு பரிசுதான் இது. மகேஷ் என்பவரின் தந்தையின் இறப்புக்கு நான் சென்றதால் அவருடைய அடிப்படை உறுப்பினர் பதவியையும் பறித்துள்ளனர்.
இதனை கருத்திக் கொண்டுதான் தெளிவான முடிவு எடுத்து நேற்று என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன். இங்கு ஏன் இணையவேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும். இன்று திமுக வேறு, அதிமுக வேறு என்பதல்ல. இரண்டும் ஒன்றாக இணைந்துதான் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன என்பதை நாடறியும்.
ஒரு தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற மாபெரும் ஒரு இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் விஜய். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். இவர்கள் மட்டும்தான் ஆள வேண்டுமா? என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எல்லாம் மாநிலங்களிலும் மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை விஜய் எட்டுவார்” இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “அதிமுகவை ஒருங்கிணைக்க நான் எந்த கெடுவும் விதிக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் வரை தூய்மையான ஆட்சி நடைபெற்று வந்தது. அதனால் இருவரும் பலமுறை வெற்றி பெற்றனர். திமுகவிலிருந்தோ, தேசிய கட்சிகளில் இருந்தோ என்னை யாரும் சந்திக்கவில்லை” என்று பதிலளித்தார்.