செல்லூர் ராஜூ | கோப்புப்படம் 
தமிழகம்

“தவெக சென்று செங்கோட்டையன் செல்லாக்காசு ஆகிவிட்டார்!” - செல்லூர் ராஜு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘யாரும் ஏற்றுக் கொள்ளாததால் செங்கோட்டையன் தவெகவுக்குச் சென்றுள்ளார். அவர் செல்லாக்காசு, திருவிழாவில் காணாமல் போன ஆடாக நாங்கள் கருதுகிறோம்’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ‘‘ கருத்துக் கணிப்புகள் தற்போது அதிமுகவுக்கு சாதகமாக வருகிறது. இந்த கருத்துக் கணிப்புகளை பார்த்து திமுக கலக்கமடைந்துள்ளது.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைபோல் வைத்துள்ளது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி வாய் திறக்காமல் உள்ளனர். பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அவர்கள் சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்கள்.

          

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சொதப்பலுக்கு தமிழக அரசே முக்கிய காரணம். வழித்தடம், எத்தனை இடங்களில் ஸ்டேஷன், எத்தனை லட்சம் பேர் பயன்பட போகிறார்கள் என்பது போன்ற புள்ளி விவரங்களை கொடுக்கவில்லை. மத்திய அரசு அதற்கான விளக்கம் கேட்டுதான் கடிதம் அனுப்பினார்கள். ஆனால், அதற்குள் ரத்து செய்ததாக திமுகவினர் வதந்திகளை பரப்பினார்கள்.

செங்கோட்டையன் செல்லாக் காசு ஆகிவிட்டார். அவரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவரை எந்தக் கட்சியும் ஏற்றுக் கொள்ளாததால் வேறு வழியில்லாமல் தவெகவுக்குச் சென்றுள்ளார்.

அதிமுகவில் தொண்டனுடைய ரதத்தத்தையெல்லாம் உறிஞ்சிவிட்டு, சுகத்தை அனுப்பவித்துவிட்டு மாற்றுக் கட்சிகளுக்கு செல்வோரை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

ஊர் திருவிழாவில் காணாமல் போன ஆட்டை நாங்கள் தேடுவதில்லை. உடனே செங்கோட்டையனை செல்லூர் ராஜு சாடல் என்று போட்டுவிடுவீர்கள். அவரையும், என்னையும் வைத்து கார்ட்டூன் போட்டுவிடுகிறீர்கள். சும்மா விடுங்க சார்’’ என்றார்.

SCROLL FOR NEXT