திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் - பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகிள் (PHTA) முதல் முறையாக முழுமையான 200 டன் உந்துவிசை திறனில் இயக்கி சோதித்து வெற்றி காணப்பட்டுள்ளது.
இம்மையத்தில் ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் இன்ஜின்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறை செமி கிரையோஜெனிக் இன்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகிள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வந்தது.
இந்த உந்துவிசை சோதனைகளில் 47 சதவிகிதம் (94 டன்), 60 சதவிகிதம் (120 டன்) மற்றும் 88 சதவிகிதம் (175 டன்) என்று படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் 9-வது கட்டமாக நடைபெற்ற சோதனையில் முதல் முறையாக 100 சதவிகிதம் முழு திறனான 200 டன் உந்துவிசை திறனில் இன்ஜினை இயக்கி சோதித்து வெற்றி காணப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி 35 விநாடிகளில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன்மூலம் 2,000 கிலோ நியூட்டன் திறன் கொண்ட எஸ்.இ.2000 இன்ஜின் மூலம், ராக்கெட்டில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்ல முடியும். இந்த இன்ஜினுக்கு எரிபொருளாக திரவ ஆக்சிஜன் மற்றும் அதிசுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.