செல்வப்பெருந்தகை
சென்னை: “காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏன் வாய் திறக்கவில்லை. பெட்ரோலியத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை அவர்கள்தான் சரி செய்ய வேண்டும். பெட்ரோலியத் துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “வரலாற்றிலேயே முதல்முறையாக காஸ் சிலிண்டர் விலை பாஜக ஆட்சியில் ரூ.2000-ஐ தாண்டியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாலர் விலையை 40-க்குள் கொண்டு வருவோம். தனிநபர் வருமானம் இரட்டிப்பாகப்படும், இரண்டு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஒரு வாக்காளருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவோம் என பாஜக வாக்குறுதி கொடுத்தது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அடகு வைத்துவிட்டனர். காஸ் சிலிண்டர் விலை குறித்து இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்கவில்லை.
தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். இது தொடர்பாக எங்களைப் போல கண்டிக்காவிட்டாலும், கோரிக்கையாவது பழனிசாமி வைக்கலாமே? காஸ் சிலிண்டர் விலை விலை உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை மோடி அரசு சரி செய்ய வேண்டும். 60 ரூபாய் சிலிண்டர் விலை ஏற்றியதை குறைக்க வேண்டும் என சொல்லி இருக்கலாம். ஏன் இது குறித்து பேசாமல் மவுனமாக இருக்கிறார் பழனிசாமி? மோடி கோபித்துக் கொள்வார் என அமைதியாக இருக்கிறாரா?
பெட்ரோலியத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை அவர்கள்தான் சரி செய்ய வேண்டும். பெட்ரோலியத் துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் தமிழக அரசு இது குறித்து விவாதித்து வருவாதாக சொல்லப்படுகிறது. முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
பட்ஜெட்டிலும் மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. இந்த விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும். கூட்டணி குறித்து பேசி முடிவான பிறகு எங்கள் விருப்பத் தொகுதி குறித்து அறிவிக்கப்படும். ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா ஆகியோர் தமிழகத்துக்கு பிரச்சாரம் செய்ய வரவிருக்கின்றனர்.
இந்தியாவை அமெரிக்காதான் ஆண்டு கொண்டிருக்கிறது. மோடி அனைத்தையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தினசரி வாழ்க்கையில் அத்தியாவசியமான சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மிகுந்த கவலைக்குரியது. இதனால் உணவகங்கள், சிறு ஹோட்டல்கள் மற்றும் பல சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்டதும், முன்பதிவு காலம் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டதும் பொதுமக்கள் மீது கூடுதல் சுமையாக மாறியுள்ளது. அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயுவில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள்மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையால் கத்தார், ஈரான் போன்ற நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளை முன்கூட்டியே கணித்து மாற்று ஏற்பாடுகளை முறையாக செய்யாமல் அலட்சியமாக இருந்த ஒன்றிய பாஜக அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, பொதுமக்கள் மற்றும் சிறு தொழில்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து தட்டுப்பாட்டை நீக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் உருவாகாத வகையில் நிலையான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.