செல்வப்பெருந்தகை
கோப்புப் படம்
சென்னை: காங்கிரஸ் விவகாரத்தில் தோழமைக் கட்சிகள் தலையிட வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியிருந்தார். இச்சமபவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலக உள்ளதாக தகவல் வெளியானது. இதையொட்டி, காங்கிரஸ் தலைமை தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் திமுக கூட்டணி கட்சிகள் இவ்விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசி வந்தது சர்ச்சையானது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எங்கள் கட்சி பிரச்சினையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் அந்தப் புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம், தெரிவித்து விட்டோம். இது குறித்து அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என முழுமையாக நம்புகிறோம்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், தோழமை கட்சிகளும் உட்கட்சி விவகாரத்தில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். தோழமைக் கட்சிகள் இதை இத்தோடு விட்டுவிட வேண்டும். இதை பெரிதுப்படுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “ஒரு கூட்டணி கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றின் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், வைகோ, திருமாவளவன் ஆகியோர் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.