கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் காங்கிரஸில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை விட பெரியவர்களா? என்றும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரை செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. திமுகவுக்கு எதிராக காங்கிரசில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போர்க்கொடி தூக்கியிருப்பதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மீது கார்கேவிடம் புகார் அளிப்பதற்காக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையில் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது.
கூட்டணி பற்றி யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி, கார்கே மற்றும் வேணுகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களை விட யாரும் பெரியவர்கள் இருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை. அகில இந்திய காங்கிரஸ் காட்டும் வழியில் செயல்படுபவன் நான். இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் ஆட்சியில் பங்கு என்ற கருத்தை பேசுவது ஏன்? இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும்.
நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை மதிப்பவன்; அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசியல் பயணத்தை தொடர்கிறோம். எங்களுக்கு என்ன தேவை என்பதை தாயும், தந்தையுமாக இருக்கின்ற காங்கிரஸ் தலைமையிடம் கூறுவோம். எனக்கு பேச தெரியும், நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் எனக் கூறுவதற்கு எதற்கு கூட்டணி, அது என்னமுறை, அது என்ன ஜனநாயகம்? ஜனநாயகத்துக்கு முரணாக, அகில இந்திய காங்கிரஸுக்கு முரணாக யார் நடந்துகொண்டாலும் அது தவறுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கார்கேவுக்கு காங்கிரஸார் கடிதம்: தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தம் மூலம் தமிழக அமைச்சரவையில் பங்கு மற்றும் உள்ளாட்சிப் பதவிகளில் 30% பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த நிர்வாகிகள் தணிகாசலம், செல்வம், சிரஞ்சீவி உள்ளிட்ட 200 பேர் இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் அமைச்சரவையில் காங்கிரசுக்கு அர்த்தமுள்ள பங்கை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, கூட்டணித் தலைமையுடன் 'தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தை' உறுதி செய்ய வேண்டும். கணிசமான எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெறுவதன் மூலம் மட்டுமே, நமது வளர்ந்து வரும் பலத்தை சட்டமன்றத்தில் வலுவாக நிலைநிறுத்த முடியும்.
அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அது சார்ந்த பதவிகளில் காங்கிரஸிற்கு 30% இடங்களைப் பெற்று நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இதே 30% பங்கு நடைமுறையையே அனைத்து அரசு மற்றும் நியமனப் பதவிகளிலும் பின்பற்ற வேண்டும். இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிகாரமளிக்கவும், உற்சாகப்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்கி, கட்சியின் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.