செல்வப்பெருந்தகை | கோப்புப் படம் 
தமிழகம்

விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு... எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் செல்வப்பெருந்தகை

செய்திப்பிரிவு

தவெக தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கைவிரித்தார்.

சென்னை துறைமுக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பிரவீன் சக்கரவர்த்தி - விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

கூட்டணி குறித்து பேச அகில இந்திய காங்கிரஸ், ஐவர் குழுவை நியமித்து, திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றவர்கள் சந்திப்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. ​இண்டியா கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும், பலமாகவும், இரும்புக் கோட்டையாகவும் உள்ளது. எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம். திமுக-வுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை மரியாதை நிமித்தமாக நடைபெற்றது.

அந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்தார். விரைவில் திமுக-வில் தொகுதி பங்கீட்டு குழு அமைத்த பின்னர் விரிவாக பேசுவோம் என்றார். திமுக-வுடன் மட்டுமே கூட்டணி. காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி - விஜய் சந்திப்பு குறித்து ஒரு புகைப்படமாவது வந்ததா? அப்படி சந்தித்திருந்தால் தேசிய தலைமைக்கு தெரியப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT