விஜய்யை விட நயன்தாரா, வடிவேலு ஆகியோருக்கு அதிக கூட்டம் வரும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளால் இளம் விதவைகள் அதிகரித்துள்ளதால், அவற்றை மூட திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், அவர்கள் கூறியதுபோல் எதுவும் நடக்கவில்லை. பெண்களுக்கு எதுவும் செய்யாமல், அவர்களுக்காக மாநாடு நடத்தி திமுக விளம்பரம் தேடுகிறது.
வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். பழனிசாமி முதல்வராவார். கூட்டணி என்பது வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக தேர்தலுக்கானதாகும். இது கொள்கை கூட்டணி அல்ல. நேற்று வந்த விஜய்க்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர் ஆதரவு கொடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது? நடிகர் வடிவேலு, நடிகை நயன்தாரா ஆகியோருக்கு விஜய்யைவிட அதிக கூட்டம் வரும்.
கூட்டம் கூடுவதால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது. அதிமுக தேர்தல் களத்தில் இல்லை என்று விஜய் சொல்வது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு பேசுவதற்கு அவருக்கு எப்படி தைரியம் வந்தது? நாவை அடக்கிப் பேச வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களின் கூட்டத்தை பார்த்தால் அதிமுகவின் பலம் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.