‘‘விஜய்யை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்கப் போகிறார்? ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் அவரை முதல்வராக்கலாம்’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: துணை முதலமைச்சர் உதயநிதி திட்டத் திட்ட அதிமுக-வுக்கு ஆதரவு பெருகிவிட்டது. தமிழக வரலாற்றிலேயே டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதே கிடையாது. இரவு, பகலாக இந்தத் தேர்வுக்கு படித்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துணை முதலமைச்சர் பொறுப்பில் உள்ள உதயநிதிக்கு அரசியல் பண்பு தெரியவில்லை. மக்களுக்காக பல போராட்டங்கள நடத்திய ஆதவ் அர்ஜுனா, தூய்மையின் பிறப்பிடம், தியாகத்தின் பிறப்பிடமான குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால், அவர் நியாயம், நீதியை பற்றி பேச வேண்டியதுதான்.
நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சி வளர்ந்த குடும்பம் அவரது குடும்பம். லாட்டரி சீட்டையே ஜெயலலிதா ஒழித்தார். ஆனாலும், மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டை நடத்தி வருகிறார்கள். அவருக்கெல்லாம் அதிமுக-வை பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. ஊடகத்தில் பேசுவது, ட்விட்டரில் பதிவுகளை போடுவதோடு அரசியல் முடிவதில்லை.
மக்களுக்காகப் போராட்டம் நடத்த வேண்டும். கடந்த ஞாயிற்றுக் கிழமை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாத மாணவர்கள் நலனுக்காக இவர்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அவரது சொந்தப் படத்தின் பிரச்சினைக்கே வாய் திறக்காதவர் விஜய், மக்கள் பிரச்சினைக்கு எப்படி வாய் திறப்பார்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘‘பாஜக கூட்டணியில் அதிமுக 10 கட்சிகளில் ஒரு கட்சி அவ்ளவுதான். எங்களுக்கும் திமுக-வுக்கும்தான் போட்டி’’ என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அவரை செல்லாக் காசு என்று சொல்லி விட்டேன். அந்த செல்லாக் காசு ஆயிரம் பேசும். அதை நகைச்சுவையுடன் கடந்து சென்றுவிட வேண்டும்” என்றார். செங்கோட்டையன் விஜய்யை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு “எந்த நாட்டுக்கு முதல்வராக்கப் போகிறார்? வேண்டுமானால் ஏதாவது கல்லூரிக்கு அவரை முதல்வராக்கலாம்’’ என்றார் ராஜு.