அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பால்கோவா கொடுத்து உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த ஓரண்டாக அதிமுகவினருக்கு தேர்தல் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கூட இதுபோன்ற பயிற்சி பட்டறைகளை நடத்தியது இல்லை. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து,பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி பூஜை செய்து உள்ளேன். மக்களின் ஏகோபித்த எதிர்ப்புடன் திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. போதை கலாச்சாரம் ஒழிந்து மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டும், விலைவாசி குறைய வேண்டும், சட்ட ஒழுங்கு காக்கப்பட வேண்டும், திமுக ஆட்சி விலக வேண்டும் என்பதே மக்களின் கனவாக உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பால்கோவா கொடுத்து உள்ளது. திமுககொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பொங்கலுக்கு பணமே கொடுக்காத திமுக அரசு தற்போது வாக்குகளை பெறுவதற்காக ரூ.3 ஆயிரம் கொடுத்து உள்ளனர்.
பிரதமரை வரவேற்று வைக்கப்பட்டு உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பேனரில் டிடிவி தினகரன் படம்வைக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் தான் பதில் சொல்ல வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ் கூறியது அவரது கருத்து. திமுகவை எதிர்க்கும் யாராக இருந்தாலும், பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் நாங்கள் சேர்த்துக் கொள்வோம் என்றார்.