செல்லூர் ராஜூ | கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
அரசியலுக்கு வந்த பின்னும் நடிப்பை விட்டு விஜய் வெளியே வரவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மூக்கையா தேவரின் பிறந்தநாளையொட்டி, மதுரை அரசரடி பகுதியிலுள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையிலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை அதிமுக மற்றும் எங்களது கூட்டணி கட்சிகள் கைப்பற்றும்.
தேர்தல் பிரச்சாரம் செய்ய செல்லும்போது, மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது. எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவிப்பது மரியாதை செலுத்துவதுபோல் தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ஏனென்றால் அவர் ஒரு நடிகர். தனது கேரக்டருக்கு தகுந்தது போன்று நடிப்பவர். அரசியலிலும் நடிக்கிறார். அப்படித்தான் எம்ஜிஆருக்கு அவர் மரியாதை கொடுப்பதுபோல நடிக்கிறார். எல்லாமே அவருக்கு நடிப்பு.
திரைப்படத்தில்கூட பெண்களை ஏளனமாக எம்ஜிஆர் பேச மாட்டார். மது அருந்த மாட்டார். ஆனால், விஜய் அப்படி இல்லை. எல்லா கேரக்டர்களிலும் நடிக்கக் கூடியவர். அரசியலுக்கு வந்த பிறகும் இன்னும் தனது நடிப்புத் தொழிலை விட்டு அவர் வெளியே வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.