செல்லூர் கே.ராஜு

 
தமிழகம்

“ஓபிஎஸ் காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்து கூட்டம் காட்டுவார்” - செல்லூர் ராஜு கிண்டல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “திமுகவில் ஆதரவாளர்களை இணைப்பதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டுவார், ” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கிண்டலாக தெரிவித்தார்.

மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி, முதல்வராக அமர வைத்தனர் என தற்போது வருத்தப்படுகிறார்கள். எந்த கட்சியை அழிக்க வேண்டும் என்று அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினாரோ, எந்த கட்சியை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தாரோ, அதற்கு நேர்மாறாக ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்துள்ளார்.

          

சட்டப்பேரவையில் ஒரு பெண் என்று கூட பாராமல் ஜெயலலிதாவை திமுகவினர் கொலைசெய்ய முயன்றனர். கருணாநிதி அதை வேடிக்கை பார்த்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து பேரவை தொடங்கும்போதே திமுகவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்.

நானே அவரிடம் இப்படி பேசலாமா என்று தகராறு செய்தேன். ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசியிருப்பாரா? அன்று முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் அவர் கட்சியை காட்டிக் கொடுப்பார் என்று நினைத்தோம்.

அதுபோல், கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டு திமுகவில் சேர்ந்துவிட்டார். நீங்கள் முன்னால் போங்க; நான் பின்னால் வாரேன் என்ற கதையாக இவர் மனோஜ்பாண்டியனையும், வைத்திலிங்கத்தையும் திமுகவுக்கு அனுப்பி வைத்தார்.

திரைமறைவில் திமுகவுக்கு விசுவாசமாக இருந்தவர், தற்போது நேரடியாக போய் விசுவாசமாக இருக்கப் போகிறார். திமுகவில் தனது ஆதரவாளர்களை இணைப்பதாகக் கூறி, காசு கொடுத்து அழைத்த வந்து கூட்டத்தை காட்டுவார்.

திமுகதான் காங்கிரசுக்கும், பாஜகவுக்கு அடிமையாக இருந்தது. முரசொலி மாறன், ஒன்றரை ஆண்டாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அவர்கள் கூட்டணி வைத்தால் ஜனநாயக கூட்டணி, நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமை கூட்டணியா?

தமிழகத்தில் தினமும், 5, 6 கொலைகள் நடக்கின்றன. சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு போய்விட்டது. ஆதி முதல் அந்தம் வரை ஊழல் நடக்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT