அமைச்சர் ரமேஷ்| கோப்புப் படம்
திருச்சி: “முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறையை வேவு பார்த்து வருகிறார். அவருக்கு இத்துறையில் இருந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். பயத்தின் காரணமாகவே இவ்வாறு அவர் செய்து வருகிறார்” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
அமைச்சர் ரமேஷ் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: சட்டப்பேரவையில் அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என கருதி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டி அனைவரது குரல்களும் ஒலிக்க தக்க அவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் மக்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை கேட்கவில்லை.
முன்னாள் அமைச்சர்கள் சிலர் சட்டப்பேரவையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர், அது சபையின் மாண்புக்கு உட்பட்டது அல்ல. மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இளைஞர்களை முதல்வர் சரியாக நடத்துவார்; சரியான இடம் அளிப்பார். முதல்வரை நோக்கி கேள்விகள் எழும்போது அதற்கு மற்ற அமைச்சர் பதிலளிப்பின் அதில் என்ன தவறு உள்ளது. எதிர் கருத்து இருப்பின் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
திருச்சியில் உள்ள அன்பில் மாரியம்மன் கோயிலில் அம்மை பாதித்தவர்களுக்கு தங்கும் மண்டபம் கட்டப்படும் என அறிவித்தோம். அந்தக் கோயிலில் வழக்கப்படி அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அது சரியாகி விட்டால் அந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வோம் என வேண்டுதல் வைப்பார்கள். அம்மை வார்த்தவர்கள் குணமான பின்பு அவர்கள் வந்து தங்குவதற்காக அந்த மண்டபத்தை அறிவித்தோம். ஆனால் திமுகவினர் அம்மை பாதிப்புக்கு உள்ளானவர்களை அங்கு தங்க வைப்பதாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சியில் நடைபெற்று வரும் போக்குவரத்து பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறையை வேவு பார்த்து வருகிறார். அவருக்கு இத்துறையில் இருந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். பயத்தின் காரணமாகவே இவ்வாறு அவர் செய்து வருகிறார். தவறு நடந்திருந்தால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த ஆட்சி காலத்தில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு தேவையற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது, அதை மட்டும் தான் நிறுத்தி உள்ளோம். கோயில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது, தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோயில்களுக்கு வெளியே செல் போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும். திருப்பதி கோயில்களுக்கு செல்லும் பொழுது பக்தர்கள் செல்போனை எடுத்து செல்வதில்லை. அந்த மனநிலை தமிழ்நாட்டிலும் வர வேண்டும்” என்றார்.