சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், புதுச்சேரி வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் புதுச்சேரி, தமிழக வேட்பாளர்களை அறிவிப்போம்.
புதுச்சேரிக்கு மாநில உரிமை வேண்டும் என்பதே எங்களின் கோட்பாடு. தமிழகமே மதுவை நம்பிதான் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. அதனை விற்று வரும் பணத்தில் நலத்திட்டம் என பேசுவது பைத்தியக்காரத்தனம். தமிழகம், புதுச்சேரியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவோம்.
பிஹாரில் ஒரு கோடி பெண்களை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கு ரூ.10 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தி வெற்றி மாநில தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டனர். அதுவே தமிழகத்திலும் நடக்கும் என்றால் ரூ.10 ஆயிரம் கொடுப்பார்களா அல்லது ரூ.15 ஆயிரம் கொடுப்பார்களா?
எஸ்ஐஆர் கொண்டு வரும்போது மேற்கு வங்கத்தில் மம்தா அதனை எதிர்த்து செயல்படுத்த முடியாது என மக்களை திரட்டி போராட்டம் செய்கிறார். ஆனால் தமிழகத்தில் அதனை அரசே செயல்படுத்துகிறது.
தேர்தல் ஆணையம், நீதிமன்றம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறைகள் எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. ஆட்சி அதிகாரம் அதில் தலையிடாது, சுதந்திரமாக செயல்படும் என நினைத்து கொண்டிக்கிறோம். ஆனால் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களின் விரல்களாக அவை இயங்கும் என சீமான் தெரிவித்தார்.