திருச்சியில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார்.
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற கருப்பொருளில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது.
சீமானின் தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியது: புதிய தேசம் செய்வோம் எனும் பெரும் கனவுடன் அரசியலுக்கு வந்தோம்.
தொடர்ந்து எவரோடும் சமரசமின்றி ஐந்தாவது முறையாக தனித்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம். தற்போது கூட்டணி என்பது சீட்டணி, நோட்டணியாக உள்ளது. ஆனால், எங்களுடைய இலக்கு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் இல்லை. ஆட்சிமுறை மாற்றம். அரசியலில் தனித்து நிற்கிறோம். எங்கள் உடன் பிறந்தவர்கள் எங்களை கைவிட மாட்டார்கள் என்பதை நம்பி தனித்து நிற்கிறோம்.
அறிவாயுதம் ஏந்தி அரசியல் களம் காண்கிறோம். இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழந்துவிடக் கூடாது என தனித்து நிற்கிறோம். சிதைந்து, அழிந்துகொண்டிருக்கும் தமிழ் மொழி காக்க நாங்கள் இயக்கத்தை கட்டி எழுப்பி வருகிறோம்.
மக்களுக்காக உழைக்க வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர். நமது தலைவன் என்பவன் நமக்கு ரத்தமானவனாக இருக்க வேண்டும். அதுதான் நமது கோட்பாடு. நம் வரலாறு தெரியாதவர்கள் நம்மை ஆள தகுதியற்றவர்கள். நமக்கான வரலாற்றை நாமே எழுதுவதற்காகத்தான் இங்கு திரண்டிருக்கிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உலகின் தலைசிறந்த நாடாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். இது தாய் மீது, தமிழ் மீது ஆணை. படிப்புகேற்ற வேலையை, ஆகச்சிறந்த கல்வியை வழங்கும் ஆட்சியை கொடுப்போம். ஏழ்மை நிலையில்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவோம்.
நாங்கள் செய்வது இன உரிமை அரசியல். இனவெறி அரசியல் அல்ல. எனது தாய் நிலத்தை நான் ஆள வேண்டும் என கேட்பது எனது உரிமை. காலம் கட்டளையிட்டு எங்களை இந்த பணியை செய்ய தூண்டியது. தமிழ் தேசிய அரசியல் காலத்தின் தேவை. இழந்த உரிமையை மீட்க வெறிகொண்டு எழுந்து வருகிறோம்.
திமுகவை விரட்டிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமரவைப்பது பேயை விரட்டிவிட்டு பிசாசை திருமணம் செய்வது போன்றது. ஒரே ஒரு முறை ஆட்சியை எங்களுக்கு கொடுத்து பாருங்கள். உலகின் தலைசிறந்த நாடாக மாற்றவில்லை எனில் அடுத்த தேர்தலில் எங்களை தோற்கடித்துவிடுங்கள். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து, 117 பெண்கள், 117 ஆண்கள் என 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இதில், காரைக்குடி தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்தார்.